ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சி தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை மறுசீரமைப்பு அமைப்பின் சட்டப் பிரதிநிதி தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) முறைப்பாடு செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசேட முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ள அவர், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சி பல தேர்தல் விதிகளை மீறிய சம்பவங்களை அவதானித்து அறிக்கை செய்துள்ளதாகவும், 2024 ஜூலை 28 அன்று மஹரகவில் நடைபெற்ற அரசியல் கூட்டமே சிறந்த உதாரணம் எனவும் கஹந்தகமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்திற்கு அரசு செவிலியர்களை சீருடையில் அழைத்து வருவது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும். இது தொடர்பான முறைப்பாடு ஜூலை 29, 2024 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்கள் சீருடையில் வராமல் இருந்தால் நல்லது என்று PAFRAL அமைப்பும் பதிலளித்துள்ளது.
ஆனால் இந்த தேர்தல் சட்டங்கள் மற்றும் அரசியல் நெறிமுறைகளை மீறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.
நியாயமான தேர்தல்
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதிலும், சட்டத்தை நிலைநாட்டுவதிலும் ஐரோப்பிய ஒன்றிய மேற்பார்வை குழு முக்கியப் பங்காற்ற முடியும்.
தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை முறையாக நடைமுறைப்படுத்தாதன் காரணமாக இலங்கையில் நியாயமானதும் ஜனநாயகமானதுமான தேர்தல் நடைமுறைக்கு ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மறுசீரமைப்பு அமைப்பின் சட்டப் பிரதிநிதி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தனது முறைப்பாடுகளில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.