கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாவை
முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக, தற்போதைய பிரதேச
சபையின் உப தலைவர் உள்ளிட்ட, சபை உறுப்பினர்கள் குழுவொன்று கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் கந்தளாய் பிரதேச சபையின் உப
தலைவர் சனத் பியரத்ன மற்றும் சபை உறுப்பினர்கள் இணைந்து இந்த முறைகேடு
தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான ஜேசிபி (JCB) இயந்திரத்தை
பழுதுபார்ப்பதற்காக பல்வேறு ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்து,
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபா (20 இலட்சம்) மோசடி செய்யப்பட்டுள்ளதாக சபை
உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணைக்கு கோரிக்கை
முந்தைய அரசாங்கத்தின் (SLPP) ஆட்சிக் காலத்தின் போது, முன்னாள் தலைவர்
உள்ளிட்ட அதிகாரிகள் குழு இதற்காக ஏமாற்று தந்திரோபாயங்களைப்
பயன்படுத்தியுள்ளதாக உப தலைவர் சனத் பியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதி முறைகேடு விவகாரம் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை
நடத்துமாறு கோரி, கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலைமையக
காவல்துறையினரிடம் உப தலைவர் எழுத்துமூலமாக முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலும், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கந்தளாய் பிரதேச சபையின் உப
தலைவர் சனத் பியரத்ன,
பிரதேச சபையின் மக்கள் வரிப்பணம், பல்வேறு திட்டங்கள் ஊடாக, முறைகேடாக
பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்பான அனைத்துத் தகவல்களும்
தற்போது திறத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.




