கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்குள் கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த
ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமை அநீதியானது என இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்படி இடமாற்ற பிரச்சினை தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர்
எஸ்.லோகநாதன் தலைமையில் இன்று (19) கல்முனையில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு லோகநாதன் குறிப்பிடும்போது,
இரண்டு வருடம் கட்டாய நிபந்தனைக் காலம்
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக வருடந்தோறும் பாடரீதியான
ஆசிரியர் தேவையான வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் மூலமாக
ஆசிரியர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் பதிலீட்டின் அடிப்படையில் “இரண்டு வருடம்
கட்டாய நிபந்தனைக் காலம் குறிப்பிட்டு” இடமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.
இக்காலத்தை பூர்த்தி செய்தவுடன் அவ்வாசிரியர்களுக்கு அவர்களுடைய முன்னைய வலயங்களுக்கு
வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் மூலமாக இடமாற்றம் வழங்கப்பட்டு வந்துள்ளதை சகலரும் அறிவர்.
அநீதியான இடமாற்றம்
இதன் அடிப்படையில் முன்னாள் கல்விப் பணிப்பாளரினால் “வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் 2021
(பதிலீடு) தமிழ்மொழி மூலம்” என்று தலைப்பிட்டும், வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தில்
EP/20/01/04 இலக்க 2021.04.08ஆந் திகதிய அறிவித்தல் கடிதத்திற்கு அமைவாக இடமாற்றம்
வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டதற்கு அமைவாக, கடமையேற்று “இரண்டு வருட
கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த” ஆசிரியர்களுக்கு இதுகாலவரை இடமாற்றம் வழங்கப்படாமை
அநீதியானது.
மேலும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரது “வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம்
2025” என்று தலைப்பிட்ட EP/20/01/04 இலக்க 2024.06.10ஆந் திகதிய அறிவித்தல் கடிதம் பந்தி (1)
இல் வலய இடமாற்ற அதிகாரியினால் தீர்மானிக்கப்படுகின்ற உச்ச பட்ச சேவைக்காலத்தினைப் பூர்த்தி
செய்த ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று
குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக இரண்டு வருட கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த சுமார்
30 பேர் வரையான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
இவ் ஆசிரியர்கள் பொத்துவில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும்,
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச பாடசாலைகளிலும் கடமைபுரிகின்றனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் “வருடாந்த ஆசிரியர் இடமாற்றம்- 2025 முன்மொழிவு என்று
தலைப்பிட்டும்EP/20/01/04 இலக்க 2024.11.13ஆந் திகதியிடப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட
பெயர்ப்பட்டியலில் கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் உள்வாங்கப்
படவில்லையென்பதை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் நீதியான, நேர்மையான நிருவாக செயற்பாட்டை விரும்புகின்ற அரசாக இருப்பதால்
கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் தொடர்பில் தாங்கள் பொருத்தமான நீதியான
நடவடிக்கையை உரியவர்கள் எடுக்க வேண்டும்.
குறித்த ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கடிதம் மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம் என
கூறினார்.