போலியான கொலை மற்றும் புதையல் வேட்டை குற்றச்சாட்டுகளில் தன்னை சிக்க வைக்கும்
சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக
அனைத்து சட்ட வழிகளையும் பின்பற்றவுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கிதிசிறி
ஏகநாயக்க( Kithisiri Ekanayake ) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
ஆதாரங்கள் இல்லாமல் தன்னை கைது செய்ய வேண்டுமென்றே சதி செய்த பொறுப்பான
அதிகாரிகள் மீது,பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது
என்றும் ஏகநாயக்க கூறியுள்ளார்.
119 இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பெலியத்த காவல்துறையினரால்
ஏகநாயக்க உட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை
14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறார்களை நேரில் கண்ட சாட்சிகளாக பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
எனினும், இதில் 17 வயது சிறுவன் முன்பு போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதே
நீதிமன்றத்தில் முன்னிலையானமை, இது சாட்சியத்தின் நம்பகத்தன்மையை நீதிபதி
கேள்விக்குள்ளாக்க தூண்டியது.
அத்துடன்; புதையலுக்காக யுவதி ஒருவரை குறித்த இராணுவ அதிகாரி உட்பட்ட
குழுவினர் பலியிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
எனினும் அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் நாட்டில் எங்கும் 18 வயது சிறுமி
காணாமல் போனதாக எந்த தகவலும் இல்லை என்ற அடிப்படையில் இராணுவ அதிகாரியும்
அனைத்து சந்தேக நபர்களும் இறுதியில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஒரு பெண் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு
கொல்லப்பட்டதாக சாட்சியான சிறுவன் கூறியதை புலனாய்வாளர்கள் சரிபார்க்கத்
தவறியது குறித்து விடுவிக்கப்பட்ட இராணுவ அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதையல் தோண்டல்
கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் பலியிடப்பட்டதாக நம்பப்படும் புதையல் தோண்டல்
சம்பவம் தொடர்பாக ஒரு மூத்த இராணுவ அதிகாரியை பொலிஸார் விசாரித்து வருவதாக
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்;.
இதற்கிடையில் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியே, தனது சட்டவிரோத கைதுக்கு ஏற்பாடு
செய்ததாக விடுவிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரியான ஏகநாயக்க இப்போது குற்றம்
சாட்டுகிறார்.
அத்துடன் நீதியைப் பெற மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

