கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 25 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இன்று (15) ஒருகுடவத்தை முற்றத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.
24 மணிநேர சேவை
இதன்போது, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணியாற்ற சுங்க அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒருகுடவத்தை சுங்கப் பிரிவிற்கு அருகில் கப்பல் வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
எனவே, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து முகவர் நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.