நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) நள்ளிரவு முதல் குறித்த கட்டணம் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள,
“அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஓட்டோ டீசல் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் மாதம் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நிவாரணம்
அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளது.“ என தெரிவித்தார்.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.