இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா செய்த செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.
தனது சொந்த பாவனைக்காக வழங்கப்பட்ட அதிசொகுசு காரான BMW காரை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்து ஊழியர்களின் போக்குவரத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு BMW 7 SERIES கார் 29.5 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார். இதன் பராமரிப்பு செலவு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
BMW காரின் பெறுமதி
இதுவரை பல சந்தர்ப்பங்களில் காரை பழுதுபார்ப்பதற்காக 6,770,349 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் மாத பராமரிப்புக்காக பெரும் தொகை செலவிடப்பட வேண்டும். அத்துடன் வருடாந்த காப்பீட்டுக்காக சுமார் 1 மில்லியன் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தனது BMW சொகுசு காரை திணைக்களத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா விற்பனை செய்துள்ளார்.
BMW காரின் தற்போதைய மதிப்பு 52 மில்லியன் ரூபா வரை செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குளிரூட்டப்பட்ட பேருந்து
விற்பனை செய்த பணத்திலிருந்து இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளை வாங்கி, ஊழியர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
இது நிறுவனத்தின் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளை அவர் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபன பணியாளர்கள் போக்குவரத்திற்காக தற்போது பயன்படுத்தப்படும் டாடா பேருந்துகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.