இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல முக்கியமான இணக்கங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் எட்டப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (12.01.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அடுத்த நான்கு நாட்களுக்குள் தாமதங்களை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டு முயற்சி
இலங்கை சுங்கம் உட்பட அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் துறைமுக சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
துறைமுகத்துறை மேம்பாட்டிற்கான குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய அதேவேளையில், தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க அனைத்து தரப்பினரும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை ஜனாதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இதன் விளைவாக, பொது மற்றும் தனியார் துறையினர், இருதரப்பினரும் உடனடித் தீர்வை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நிலம் ஒதுக்கீடு
இதன்போது, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட இணக்கம் வெளியிட்டனர்.
கூடுதலாக, கொள்கலன்களை சேமிப்பதற்காக புளூமெண்டல் பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது, ஜனவரி 31ஆம் திகதிக்குள் 2 ஏக்கர் நிலமும், பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் மீதமுள்ள பகுதியையும் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொள்கலன் வாகனங்களால் ஏற்படும் நெரிசல் பிரச்சினையை நிவர்த்தி செய்து, இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் நிலத்தை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இதன் மூலம் முனையங்களில் போக்குவரத்து எளிதாக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.