பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட், விசாரணைக்கு வருவதற்கு மனரீதியாக தகுதியுள்ளவரா என்பதை தீர்மானிக்க நாளை (11.12.2025) கொழும்பு நீதித்துறை வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (10.12.2025) கொழும்பு உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
குறித்த வழக்கு இன்று (10.12.2025) கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் அழைக்கப்பட்டது.
பிரதிவாதி டெய்சி ஃபாரெஸ்ட் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தனது கட்சிக்காரர் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சு்ட்டிக்காட்டியுள்ளார்.
ஞாபக மறதி
இதன்போது, பிரதிவாதி டெய்சி ஃபாரெஸ்டின் சட்டத்தரணி, விசாரணைக்கு முன்னிலையாக அவர் மனரீதியாக தகுதியற்றவர் என நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதி விசாரணைக்கு முன்னிலையாக மனரீதியாக தகுதியுள்ளவரா என்பதை தீர்மானிக்க கொழும்பு நீதித்துறை வைத்திய அதிகாரி மூலம் விசேட வைத்திய அறிக்கையை வரவழைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி பிரதிவாதி நாளை (11.10.2025) சம்பந்தப்பட்ட தேர்வுக்கு முன்னிலையாக உள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
தொடர்புடைய தேர்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வழக்கு பரிசீலிக்கப்படும் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
ஒத்திவைப்பு
அதன்படி, தொடர்புடைய தேர்வு அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக ஈட்டிய 59 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பயன்படுத்தி பெறுமதியான சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

