சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் தமக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டுமென பிரபல நடிகை தமிதா அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிதா போட்டியிடவிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தமிதா இரத்திரனபுரி மாவட்டத்தில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனு பட்டியல்
எனினும் இறுதி நேரத்தில் தமிதாவின் பெயர் குறித்த வேட்பு மனு பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் தமிதா ஐக்கிய மக்கள் சக்தி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றார்.
தொடர்பாடல் பிரச்சினையால் தமது பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளதாகவும் அவ்வாறென்றால் கட்சியில் இருப்பவர்களுக்கு எழுதத் தெரியாத அல்லது கட்புலன் மற்றும் செவிப்புலன் அற்றவர்களா என தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்பாடல் பிரச்சினை
இவ்வாறு தொடர்பாடல் பிரச்சினையால் தமக்கு வேட்பு மனுவில் இடம் வழங்கப்படவில்லை என்றால் தேசியப் பட்டியல் ஆசனமொன்று தமக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியலிலிருந்து விலகி தமக்கு அந்த இடத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
தொடர்பாடல் பிரச்சினை என ரஞ்சித் மத்துமபண்டார கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என தமித தெரிவித்துள்ளார்.