யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்து சென்றனர்.


திருகோணமலை
தீபாவளி தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில்
விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.

தீபாவளி பண்டிகையையொட்டி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர,
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வர கோவிலில் மத சடங்குகளில் பங்கேற்று
ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர், கோவிலின் குறைபாடுகள் குறித்து கோவில் நிர்வாகத்தினருடன்
கலந்துரையாடினார், ஒரு சிறிய ஆய்வு மேற்பார்வை நடத்தியதுடன் தேவையான பணிகளை
மேற்கொள்ள எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

செய்திகள் – எம்.என்.எம்.புஹாரி
மலையகம்
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை
(20.10.2025) இன்று வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான
குருக்கள் சிவஸ்ரீ சற்குண சன்மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய
வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொதுமக்களும்
இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட
வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில்
ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக
கொண்டாடினர்.
செய்திகள் – கிஷாந்தன்

மட்டக்களப்பு
கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன்
ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை(20.10.2025) நடைபெற்றது.
கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு
குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் திகழ்கின்றது.
இதன்போது தீபாவளி விசேட
பூஜையை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஆலய மூல மூர்த்தியாகிய கிருஷ்ண பெருமானுக்கும், ஏனைய பரிபாரத்
தெய்வங்களுக்கும் இடம்பெற்ற விசேட பூஜை அபிஷேகம் இடம்பெற்றது. இதன்போது
அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
செய்திகள் – வ.சக்திவேல்



