இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள
நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்
பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல்
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல்
அலுவலகத்தில் இருந்து காலை முதல் வாக்கு பட்டியல் வாக்களிப்பு
நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
442 வாக்களிப்பு நிலையங்கள்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான
திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பட்டிகள் விநியோகம்
செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக
பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்
சுமார் 4,49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட
தெரிவித்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை காலை 7 மணி தொடக்கம்
மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய
நேரகாலத்திற்கு சென்று செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.