முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட
மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தில் நிலைகொண்ட இராணுவத்தினர் காணியினை விட்டு வெளியேறிய பின்னர் அங்குள்ள தேக்குமரங்கள் சிலரால் அறுக்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தபுரம் கிராமத்தில் விடுதலைப்புலிகளின் வனவளத்திணைக்களத்தினரின் பண்ணையாக
காணப்பட்ட 20 ஏக்கர் காணியில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர்
இராணுவத்தினர் முகாம் அமைத்து வசித்து வந்துள்ளார்கள்.
திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்தநிலையில் 14 ஆண்டுகளின் பின்னர் 28.10.2024 அன்று இராணுவத்தினர்
வெளியேறியுள்ளனர்.
குறித்த காணியில் பயன்தரு மரங்கள் அதிகளவில் காணப்படும் நிலையில் தற்போது 25 வரையான
தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்டுள்ளன.
எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை
என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து பிரதேசவாசிகளிடம் கேட்டபோது, இவ்வாறு சட்டவிரோதமாக மரம்
ஏற்றுபவர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.