விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் (Anuradhapura) மேலதிக நீதவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் அநுராதபுரம் அருகே ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உள்ளிட்ட ஒன்பது சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தில் கடமையாற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் ஒருவரின் மனைவி என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தன் மனைவியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் அவரது கணவரான பிரதிப் காவல்துறைமா அதிபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக நீதவான்
இதன்பின்பு, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் நேற்று (08) மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

