பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு
வர திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக சர்வஜன
அதிகாரத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தனது நிலைப்பாட்டை விளக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, இந்தப்
பிரேரணை தற்போதைய பிரதி அமைச்சரை விட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் கிழக்கு
கட்டளை தளபதியையே குறிவைப்பதாகக் கூறினார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீது பழி சுமத்தும் சதித்திட்டத்தின் ஒரு
பகுதியாக தானும் தனது கட்சியும் இந்தப் பிரேரணையைப் பார்ப்பதாக அவர் மேலும்
கூறினார்.

எதிர்க்கட்சிகள் நேற்று சபாநாயகரிடம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண
ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ள நிலையில்
அவரது இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் அருண ஜயசேகரவின் தொடர்பு மற்றும் நலன் மோதல் குறித்து கடுமையான கவலைகளை மேற்கோள்
காட்டி, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க முடிவு செய்தது.
உயிர்த்த தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சம்பவங்களில், வவுணத்தீவு
காவல்துறை கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு உள்ளிட்ட முக்கிய
சம்பவங்களின் போது, கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக ஜயசேகரவின் பங்கு குறித்து
இந்தப் பிரேரணை எச்சரிக்கையை எழுப்புகிறது.

