இந்தியத் தொழிலதிபர் அதானியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் அமெரிக்க டொலர் 6 சதத்திற்கும் குறைவான தொகையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று(28.01.2025) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதானியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அரசாங்கம் இதனை மறுத்திருந்தது.
மக்களின் பொருளாதாரச் சுமை
இந்நிலையில், இந்த திட்டம் இரத்து செய்யப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அரசாங்கமாக மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதை உணர்வதாகவும் இதனால் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திட்டத்தை திருத்தியமைக்க அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புடன் மக்களின் பொருளாதாரச் சுமையையும் கருத்தில் கொண்டுள்ளதாக ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மன்னார் மற்றும் புனரீன் பகுதிகளில் இரண்டு காற்றாலைகளை அமைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் கடத்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.