கரூர் துயர சம்பவம் விபத்து அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பல மணி நேரம் தாமதம்
எடப்பாடி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
அதில்,
கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது என்று
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்?
அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கூட்டம் பதட்டம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின் துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா?
இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றி எந்த விபரமும் இல்லை.
இது பற்றியெல்லாம் எந்த பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும் என்றும் கேள்வி எழுப்பினார்.