சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி முதலீட்டு விளம்பர காணொளிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹல ஜயவர்தன பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தாம் முதலீட்டு திட்டங்களை ஆதரிப்பது போல காட்டும் அனைத்து வீடியோக்களும் முற்றிலும் போலியானவை என்றும், அவை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோக்களை தயவுசெய்து நம்ப வேண்டாம். எந்த முதலீட்டு அல்லது நிதி விளம்பரங்களுடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இவை AI மூலம் உருவாக்கப்பட்டு மக்களை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் குரல் மற்றும் தோற்றம் போலியாக்கம்
மோசடி செய்பவர்கள், AI காட்சி உருவாக்கம் (visual generation) மற்றும் குரல் போலியாக்கம் (voice cloning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தாம் பேசுவது போலவும் முதலீட்டை பரிந்துரைப்பது போலவும் வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர் எனவும் இதனால் பலர் உண்மையென நம்பி பணம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
மற்ற கிரிக்கெட் வீரர்களும் இலக்காகினர்
இதேபோன்ற AI மோசடி விளம்பரங்களால், முன்னாள் இலங்கை அணித் தலைவர்கள் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரும் முன்பே பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு மோசடி உள்ளடக்கங்களை அடையாளம் காணும் வழிகள்
அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள், கீழ்க்கண்ட அறிகுறிகளை கவனிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்:
• மிக அதிக அல்லது உத்தரவாதமான லாபம் எனும் வாக்குறுதிகள்
• உடனடியாக முதலீடு செய்யுமாறு அழுத்தம்
• தனிப்பட்ட விவரங்கள், வங்கி தகவல்கள் அல்லது OTP கோருதல்
• அதிகாரப்பூர்வமற்ற இணையதள இணைப்புகள் அல்லது தனிப்பட்ட மெசேஜிங் செயலிகள்
• பிரபலங்களை பயன்படுத்தியும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாமை
• உதடு அசைவு சரியாக இல்லாதது, இயல்பற்ற முக அசைவுகள், ஒரே மாதிரியான குரல்
• நம்பகமான ஊடகங்களில் வெளியிடப்படாத தகவல்கள்
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும், தகவல்களை அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட மூலங்கள் மூலம் சரிபார்க்கவும், மேலும் இவ்வாறான மோசடி உள்ளடக்கங்களை சமூக ஊடக தளங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முறைப்பாடு செய்யவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

