முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடன்பாட்டிலிருந்து விலகும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!- கஜேந்திரகுமார் சீற்றம்

“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக்
கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற
வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக
ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.” என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலைத் தமிழ்க் கட்சிகள் அணுகும்
முறைமை சம்பந்தமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி நடத்தி வரும் கூட்டங்கள்
தொடர்பிலும் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கூட்டத்தை நடத்தியது தமிழ்க் கட்சிகள் அல்ல. அது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியே நடத்தியது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிகள் கூடி
மாகாண சபையை வைக்க வேண்டும் என்பது தொடர்பிலும், அதனை நடைமுறைப்படுத்த
வேண்டும் என்பது தொடர்பிலும் கதைத்துள்ளனர்.

உடன்பாட்டிலிருந்து விலகும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!- கஜேந்திரகுமார் சீற்றம் | Dtna Withdraws From Agreemed Gajendrakumar

13 ஆம் திருத்தம் இறுதி தீர்வும் அல்ல

நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில்
மிகத் தெளிவாக ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் அரசியல் நடத்த அறவே இடமில்லை
என்பதனை எழுத்து மூலமாக தெளிவாக வலியுத்தி வந்துள்ளோம். அது மட்டுமன்றி, 13
ஆம் திருத்தம் இறுதித் தீர்வும் அல்ல, ஏக்கிய இராச்சிய யோசனை நிராகரிக்கப்பட
வேண்டும் என்ற இரண்டும் ஒப்பந்தத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இணங்கி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்
அனைவரும் ஒப்பமிட்டனர். அதற்குப் பிறகு உள்ளூராட்சி சபையில் எங்களோடு இணைந்து,
நாங்கள் விட்டுக் கொடுப்புகளைச் செய்து அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்த
பின்பு, நன்மைகளை பெற்ற பிறகு, எம்மோடு ஒப்பந்தம் செய்திருக்காது விட்டால்
அவர்கள் எந்தவொரு சபையிலும் பதவிகளை எடுத்திருக்க முடியாது.

தவிசாளர்
பதவிகளையும் பெற்றிருக்க முடியாது, அப்படிப் பதவிகளைபெற எமது உதவிகளைப் பெற்று
விட்டு, இப்போது செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் அவர்கள் இந்த நேரத்தில்
13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில்
இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் ஒரு மாதத்துக்கு முன்பதாக
– நான் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு முன்னர் – அதாவது, 13 ஆம் திருத்தம்
தொடர்பில் அவர்கள் திருகோணமலையில் நடத்திய சந்திப்புக்கு முன்பே தெளிவாக இந்த
விடயத்தை – 13 ஆம் திருத்த விடயத்தில் ஈடுபட்டால் ஒப்பந்தத்தில் இருந்து
விலகும் செயலாகவே நாம் பார்ப்போம் – என்பதை நாம் அவர்களிடம் சொல்லியிருந்தோம்.

13 ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த
ஏக்கிய இராச்சிய அரசமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை
திருப்பி ஏக்கிய இராச்சிய அரசமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு
நிறைவேற்றுவதற்கு துணை போகின்ற செயலாகவே பார்க்கின்றோம்.

உடன்பாட்டிலிருந்து விலகும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!- கஜேந்திரகுமார் சீற்றம் | Dtna Withdraws From Agreemed Gajendrakumar

ஜனநாயக தமிழ்த்தேசியகே கூட்டணியின் பங்காளிகள்

ஜனநாயகத் தமிழ்த் தேசியகே கூட்டணியின் பங்காளிகள் மாகாண சபை தேர்தலை
நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளே தமிழ் அரசியலை நகர்த்த முடியாது என ஜனநாயகத்
தமிழ்த் தேசியக் கூட்டணியினருடனான எமது எழுத்து மூலமான ஒப்பந்தத்தில்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

13 ஆம் திருத்தம் இறுதித் தீர்வல்ல.

ஏக்கிய இராச்சிய யோசனை ஒரு தீர்வல்ல.
இரண்டும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை எழுத்து மூலமாகப் பதிவு
செய்திருந்தோம்.

அதற்குப் பிறகு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்
அனைவரும் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து விட்டுக் கொடுப்புகளை செய்து பதவிகளை –
சபைகளைக் கொடுத்த பிறகு 13 ஆம் திருத்தம் தொடர்பிலும் மாகாண சபை தொடர்பிலும்
பேசுகின்றனர்.

அரசு புதிய அரசமைப்பை எல்லாம் கொண்டு வரப் போவது கிடையாது. இருக்கின்ற
அதிகாரங்களை பயன்படுத்தி, எங்களுடைய செயற்பாடுகளை நாம்தான் முன்னெடுக்க
வேண்டும். இல்லாவிட்டால் அதையும் இல்லாது செய்யும் அரசாகவே இது இருக்கின்றது.

ஆகவே அந்த ஒப்பந்தத்தை மீறுகின்ற நோக்கத்தோடு இதனைச் செய்யவில்லை என ஜனநாயகத்
தமிழ் தேசியக் கூட்டணியினர் எமக்குத் தெரிவித்தனர்.

அப்போது நான் சொன்னேன்.

அரசு தெளிவாக பிரதமர், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர்
என முக்கியமான தரப்புகள் உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்ற
இடத்ததில் நாங்கள் இவ்வாறு செயற்பட முடியாது என்றேன்.

உடன்பாட்டிலிருந்து விலகும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!- கஜேந்திரகுமார் சீற்றம் | Dtna Withdraws From Agreemed Gajendrakumar

13 தொடர்பான கூட்டங்கள்

இந்த 13 தொடர்பான கூட்டங்களை நடத்துவதன் சூத்திரதாரி சுரேஷ் பிரேமச்சந்திரனே.
சுவிட்ஸர்லாந்தில் நடந்த சந்திப்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
சார்பில் பிரதிநிதியாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்துகொண்ட வேளையில், புதிய
அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாக அப்போது தெளிவாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அரசிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மேலதிகமாக இருக்கும் போது
ஒருதலைப்பட்சமாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தக் கூடிய சூழலில் அரசு
இவ்வாறான பதிலைச் சொல்லி இருப்பதன் பின்ணணியில், 13 ஆம் திருத்தத்தைப் பற்றி
தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கிய இராச்சிய அரசமைப்பை
எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்கிய இராச்சிய
அரசமைப்பைத் தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்குத் துணை
போகின்ற செயலாகவே பார்க்கின்றோம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நாங்கள் வலியுறுத்துவது தயவு செய்து
எமது மக்களுக்கு மோசமான செயலைச் செய்யாதீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளர் சுமந்திரன் தான் உருவாக்கிய ஏக்கிய இராச்சிய வரைவை தமது கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தனித்து அழுத்தங்களைக்
கொடுத்து எதிர்க்காமல் பண்ணுவதற்குரிய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்
சூழலில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாவது அதை எதிர்த்து செயற்பட
வேண்டும்.

சுமந்திரன் போன்ற தரப்புகளுக்கு துணை போகின்ற வகையில் ஏக்கிய இராச்சிய வரைவை
நிறைவேற்றுவதற்குச் செயற்படக்கூடாது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனோ – தமிழ்த் தேசியப் பேரவையுடனோ ஜனநாயகத்
தமிழ்த் தேசியக் கூட்டணி பயணிக்க விருப்பமில்லாவிடின் பகிரங்கமாக வெளியேற
முடியும்.

உடன்பாட்டிலிருந்து விலகும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி!- கஜேந்திரகுமார் சீற்றம் | Dtna Withdraws From Agreemed Gajendrakumar

ஒற்றையாட்சிக்குள் முடக்கும் நிகழ்ச்சி

நாம் தவறாக நினைக்கப் போவதில்லை. கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.

இதற்குப் பிறகும் 13 பற்றி மக்கள் மத்தியில் கொண்டு போய் கருத்தை
விதைக்கின்றது என்பது முழுக்க முழுக்க சுமந்திரன் உருவாக்கிய அரசியல் வரைவைக்
கொண்டு ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போகின்ற –
உண்மையாக ஒத்துழைக்கின்ற – செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

38 வருடங்களாக நடைமுறையில் இல்லாத அரசமைப்பு விவகாரத்தை நடைமுறைப்படுத்தக்
கேட்கின்றோம் என்று சொன்னால் எந்தளவு தூரத்துக்கு அது பிரயோசனமற்றது என்பது
அந்தக் கோரிக்கையிலே வெளிவருகின்றது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தமிழ்
மக்கள் நிராகரிக்கவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய
அம்சத்தை தீர்வாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஒற்றையாட்சியைத் தாண்டிய ஒரு
சமஷ்டி ஆட்சியூடாக மட்டும்தான் நடைமுறைப்படுத்த முடியும்.

இந்தியா தொடர்ந்தும்
13 ஆம் திருத்தத்தை பற்றி கதைப்பது என்பது அர்த்தமற்ற கருத்தாகத்தான் நாங்கள்
கருதுகின்றோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.