“பிள்ளைகளோடு ஆலயத்திற்கு தானே சென்றிருந்தோம்.. பிறகு ஏன் நான் மட்டும் வைத்தியசாலையில்! எனது ஒற்றை கால் எங்கே..?? என் பக்கத்தில் இருந்த என் இளைய மகள் எங்கே..?? எனது கணவனோடு நின்ற என் மூத்த மகன் எங்கே..??” இப்படி என்ன நடந்தது என்று தெரியாமல் அன்று பலர் வைத்தியசாலையில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
“எனது காது ஏன் கேட்கவில்லை!! ஏன் எனது மற்றொரு கையை காணவில்லை! குடும்பத்தோடு சந்தோஷமாக வந்தோமே ஏன் எங்களது மொத்த சந்தோஷமும் இப்படி சீர்குலைக்கப்பட்டது? என் குழந்தைக்கு பசித்திருக்குமே.. அவன் ஆசையாக அணிந்து வந்த புத்தாடை இரத்த நிறம் பூசிக் கொண்டதே.. உயிர்த்த இயேசுவின் கல்லறை இடிந்து வீழ்ந்து விட்டதோ..” என்று அன்றையதினம் ஆலயத்திற்குள் அல்லாடித் திரிந்த ஆன்மாக்கள் நூறு..
நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video)
இலங்கை எங்கும் மரண ஓலம்..
இப்படியாக, வெளிநாட்டவர்கள் சிலர் உள்ளிட்ட 270 இற்கும் மேற்பட்ட இலங்கை மக்களது இரத்தத்தின் மீது ஒரு துயர வரலாறு எழுதப்பட்டு இன்றோடு ஐந்து வருடங்கள்..
270 இற்கும் மேற்பட்டோர் என்பது அப்போது கணக்கெடுக்கப்பட்ட உறுதியான தொகை தான், ஆனால் அதன் பின்னர் படுகாயமடைந்து நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சிலரும் இருக்கக் கூடும்.
அன்று, முழு உலகமும் இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பினை கொண்டாட ஆரம்பித்த அந்த காலைப் பொழுதினில் இலங்கையில் மாத்திரம் ஒரு துயரப் படுகொலை சரித்திரம் வரையப்பட்டது.
அன்று காலை 08.45 மணிக்கு அனைவரும் ஆலயத்தில் ஒன்று கூடியிருந்த தருணம்.. வெடித்தது அந்த குண்டு.
அந்த குண்டுகள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம், பலருக்கு சாதகமாக அமைந்த அந்த மாற்றங்கள், அப்பாவி மக்களுக்கு முழு சந்தோசத்தையும், வாழ்க்கையையும் கூட வேரோடு அறுத்து வீசியது போன்ற துயரகரமான மாற்றத்தை கொடுத்தது.
“ஒற்றை செருப்போடு தன் சகோதரனை தேடித் திரிந்த சகோதரன், தன் பிள்ளையை ஆலயத்திற்குள் தேடி கிடைக்காமல் வீதியில் மாரில் அடித்துக் கொண்டு அழுத அந்த தாய், இரத்தம் தோய்ந்த உடைகளோடு, வெளிநாட்டில் இருந்து விடுமுறையை கழிக்க வந்து தன்னுடைய பிள்ளைகளை வைத்தியசாலையில் தேடிக் கொண்டிருந்த அந்த வெளிநாட்டவர், தன்னுடைய இரட்டை பிள்ளைகளுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து, ஆலயத்திற்கு வரும் முன்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், அந்த சந்தோசம் சில மணிநேரங்களிலேயே சுக்குநூறானதை நினைத்து கதறிய தந்தை” என்று அப்போது நாம் கண்ட கோரக் காட்சிகள் ஆயிரம்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
இதில், வெளிநாட்டவர்கள், பொலிஸார் உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன.
ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்ஸ்பரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தன.
இவ்வாறு நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னர் முழு நாட்டின் அமைதியும் சீர்குழைந்தது. எங்கு எப்போது குண்டு வெடிக்கும், எங்கே செல்வது என்ற ஒரு நிலைக்கு அந்த ஒரு நாளில் மக்கள் தள்ளப்பட்டனர்.
பண்டிகையை கொண்டாட ஆயத்தமாக இருந்த மக்களின் நிம்மதியை, சந்தோஷங்களில் பேரிடி விழுந்தாற் போல அன்றைய தினம் சீர்குழைந்தது.
பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர், ஆங்காங்கே மர்மப் பொதிகள், குண்டு வெடிப்புக்கள், பலர் கைது, இலங்கை முழுதும் மரண ஓலம் இப்படி உலகமே இலங்கையில் என்ன நடக்கின்றது என பார்த்துக் கொண்டிருக்கையில் தமது உறவுகளைத் தேடி வைத்தியசாலைகளின் வாயில்களிலும், ஆலய வாயில்களிலும் கதறலும் கண்ணீருமாய் பலர் நின்றிருந்தனர்.
இரத்தம் தோய்ந்த உடைகளுடனும், இரத்தமும் சதையுமாக இருந்த தம்மவர்களை தேடிய வெளிநாட்டவர்களும், தமது தேசமே கொலைக் களமாக மாறிய அவலத்தை நினைத்து கதறும் இலங்கை மக்களும் உலக அளவில் தலைப்புச் செய்திகளாயினர்.
இந்தக் கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் சரியாக ஐந்து வருடங்கள். நீதிக் கோரி போராட்டங்கள் பல, தமது உறவுகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வெளிநாட்டவர்கள் பலர், இந்த சம்பவத்தை வைத்து நாட்டில் தமக்கு சாதகான ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த சிலர், நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தாக்குதலை வைத்து இன்றும் அரசியல் பிழைப்பு நடத்தும் பலர் என இந்த ஐந்து வருடங்கள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கின்றது. நீதியும் கிடைக்கவில்லை, மக்களின் வாழ்வியலும் மாறவில்லை…!!
இவ்வாறான நிலையில் இலங்கை மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகிறது.. மீண்டும் குண்டுத் தாக்குதலும் உயிரிழந்தவர்களும் பேசுபொருளாக போகின்றனர். மீண்டுமொரு ஆட்சி மாற்றம் இடம்பெற போகின்றது.
இவை அனைத்தையும் தாண்டி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்பும் தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி சனல் 4 ஊடகம் கடந்த வருடம் ஒரு ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. அதுவும் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை தரவில்லை.
அதையடுத்து முன்னாள் ஜனாதிபதியும் தாக்குதல் நடந்தபோது நாட்டின் தலைவராக இருந்தவருமான மைத்திரிபால சிறிசேனவும் தனது அரசியல் பிழைப்புக்காக குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மை தனக்குத் தெரியும் என்ற ஒரு புரளியை கிளப்பினார். ஆனால் அந்த புரளியும் அரசியலில் சர்ச்சைகளை ஏற்டுத்தியதே ஒழிய நீதியைத் தேடித் தரவில்லை..
இறுதியில், சிலரின் அரசியல் இலாபங்களுக்காக இலங்கையின் அப்பாவி உயிர்கள் தீவிரவாதத்திடம் விலை பேசப்பட்டன..
வாகன இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள்
யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு,
21 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>