கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால்
நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுர்வேத
வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு
மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தடை உத்தரவினை கல்முனை
மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.
குறித்த
வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்தை தடுத்து
நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு மீதான விசாரணை
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில்
திங்கட்கிழமை (17) மறு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, குறித்த
நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர்
சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை
ஆணைக்குழுவின் செயலாளர் ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேர் கொண்ட பிரதிவாதிகள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
தடை உத்தரவு
இதனையடுத்து, இரு தரப்பினரின்
எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர்
மாதம் 8ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்திய
அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் தொடர்பில் மீண்டும் நீடிக்கப்பட்ட தடை
உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரரின் வழக்கினை
ஆதரித்து சட்டத்தரணிகளான ஐ .எல்.எம் றமீஸ், எம்.எம்.எம்.முபீன் ஆகியோர்
முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




