நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாணவர்களின் உடைகளோ உபகரணங்களோ இழந்திருந்தால் அதனை தடையாக கொள்ளாது அவர்களுக்கு கற்றலுக்கு தேவையான சூழலினை ஏற்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அதிபர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர்களுக்கான கூட்டம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று 13 ஆம் திகதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலைகளுக்கு போக முடியாதிருந்தால் அவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கற்றலுக்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் பாரியளவில் பாதிப்பு
இந்த இயற்கை அனத்தத்தினால் நுவரெலியா மாவட்டம் பாரிய அளவில் பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பு காரணமாக இன்று நாம் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் கட்டியெழுப்ப வேண்டிய நிறைய விடயங்கள் காணப்படுகின்றன.

நாம் இன,மத,மொழி,கட்சி பேதங்களை மறந்து எவ்வாறு செயப்பட்டோமோ அதே போன்று தொடர்ந்து ஒன்றிணைந்து செயப்பட்டால் அதனை வெற்றிக்கொள்வது பெரிய காரியமல்ல. இதற்கு உங்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
அதே நேரம் நுவரெலியா என்பது எமது நாட்டின் இயற்கையின் கொடையில் அமையப்பெற்ற ஒரு அழகான நகரம்.
இந்த நகரத்திற்கு நான் மாத்திரமன்றி நாட்டில் வாழும் பலர் ஓய்வுக்காகவும், பொழுது போக்குக்காகவும் மிகவும் விருப்பத்துடன் வருகை தருகின்றார்கள். ஆனால் இன்று அந்த அழகான நகரம் எமது செயற்பாடுகளால் அழகு குன்றிப்போயுள்ளது.
அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பினை நாங்களும் எங்கள் அரசியல் பிரமுகர்களும் வழங்குவார்கள் என நம்புகிறறேன்.
2026 ஆண்டு கல்வி மிக சவால்மிக்கது
இதனை கட்டியெழுப்புவதற்கு சரியான தரவுகள்,தகவல்கள் மிகவும் முக்கியமானது. அதனை நீங்கள் தான் சரியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2026 ஆண்டு எமது கல்வி மிகவும் சவால்மிக்கது அதற்கு அந்த சவாலினை வெற்றிக்கொள்வதற்கு நாம் நாடு என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இந்த அனர்த்தத்தின் போது சிரமங்களை பாராது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் இந்த வேளையில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர,கிட்ணன் கலைசெல்வி,அனுசா உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துசாரி தென்னகோன்,மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் கல்வி செயலாளர்கள் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

