கிளிநொச்சி(Kilinochchi) – இரணைதீவிற்கு அண்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில்
ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த
எட்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கைதான கடற்றொழிலாளர்கள்
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய
கடற்றொழிலில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைய இன்று வரை விளக்க
மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம்
(22)கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி
மீன்பிடித்த முதலாவது குற்றச் சாட்டுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம்
விதிக்கப்பட்டதுடன் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது
குற்றச் சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளது.