பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு அறிவித்துள்ளார்.
நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் தொடர்புடைய வழக்கு இன்று(16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் கோரிக்கை
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, இந்த வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியும் விசாரணையை மேற்பார்வையிட்டவருமான ஷானி அபேசேகர சாட்சியமாகப் பெயரிடப்படவில்லை என்று நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஷானி அபேசேகரவை 2022 நவம்பர் 29 ஆம் திகதி சாட்சியாகப் பெயரிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாகவும், வழக்குத் தொடுப்பவர் சார்பில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அது பரிசீலிக்கப்படும் என்று தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
109வது சாட்சியாக ஷானி அபேசேகர
எனினும், சம்பந்தப்பட்ட வழக்கில் ஷானி அபேசேகர இன்றுவரை சாட்சியமளிக்கவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்..

அதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று, வழக்குத் தொடுப்புத் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, இந்த வழக்கில் ஷானி அபேசேகர ஏற்கனவே 109வது சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளார்.

