கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் போது 20,000
தொடக்கம் 22000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என ஆனையிறவு உப்பளத்தினுடைய
முகாமையாளர் விவேகானந்தன் சுஜந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 களின் பின்னர் செயலிழந்து போன ஆனையிறவு உப்பளம் மீளவும்
ஆரம்பிக்கப்பட்டு உப்பு உற்பத்திகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விளைவிக்கப்படுகின்ற உப்பினை பொதி செய்து விநியோகிப்பதற்கான
நடவடிக்கைகள் கடந்த மாதங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டு அந்தப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பெயர் மாற்றம்
இங்கு உற்பத்தி செய்யும் உப்பு ரஜ லுனு என்ற பெயரில் பொதி
செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு வெளியிட்டதுடன்
அதன் பெயரை மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து கைத்தொழில் அமைச்சர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகரன் ஆகியோர் உறுதி அளித்ததன் படி குறித்த உப்பு ஆனையிறவு உப்பு என்ற
பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதன் முதலில் விற்பனைக்கு
விடப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த உப்பளத்தின் முகாமையாளர் ஆனையிறவு உப்பளத்தின்
கீழ் உள்ள 700 ஏக்கர் நிலப் பரப்பில் தற்போது 500 ஏக்கர் நிலப்பரப்பில்
மாத்திரம் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதன் மூலம் 15 மெற்றிக் தொன்
உப்பு அறுவடை செய்யக் கூடியதாக இருப்பதாகவும் எதிர்வரும் ஆண்டளவில் 700 ஏக்கர்
நிலப்பரப்பினும் 20 தொடக்கம் 22 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய
முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


