நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண சேவைகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்காக அவசர ஒருங்கிணைப்புப் பிரிவை நிறுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து இந்த அமைப்பை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களிடமிருந்து பெறப்படும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள்
அனைத்து உதவிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும், செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

உதவி முகாமைத்துவத்துடன் மேலதிகமாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கு ஒருங்கிணைப்பதற்கும் இந்த பிரிவு செயல்படும் என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு
மேலும், தேவை உள்ளவர்களுக்கு சர்வதேச ஆதரவையும், வெளிநாடுகளில் உள்ள ஆதரவாளர்களின் உதவியையும் விரைவாகவும் வினைத்திறனுடனும் சென்றடைய இந்த பிரிவு வசதியை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு, அனர்த்தத்திற்கு விரிவான மற்றும் பயனுள்ள பதிலளிப்பை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயற்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

