செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்புப் பணிக்குழுவை அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) அழைப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் தேர்தல் செயல்முறைகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பு
இலங்கை விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பங்காளித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், ஆறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளது.
இதேவேளை, வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான ஜோசப் பொரெல் (Josep Borrell), ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர் ( Nacho Sánchez Amor) என்பவரை இலங்கை தேர்தலுக்கான தலைமைக் கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய முறைமை
இந்த நிலையில் அவர் தலைமையிலான கண்காணிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் கண்காணிப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய முறைமைக்கு இணங்க, தேர்தலுக்குப் பிறகு கண்காணிப்புக்குழு பூர்வாங்க அறிக்கையை வெளியிடுவதுடன் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தும்.
அத்துடன் எதிர்கால தேர்தல் செயல்முறைகளுக்கான பரிந்துரைகள் உட்பட இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தேசிய அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.