இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் என்ஜின் கொள்ளளவின் பிரகாரம் வரி அறவிடுவது தொடர்பான விளக்கங்கள் அரசாங்கத்தினால் அண்மையில் வெளியான வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளன.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட Excise Duty தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை(11.01.2025) இரவு நிதி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சாதாரணமாக இறக்குமதி
“சாதாரணமாக இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் மீது நான்கு அம்சங்களில் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு அங்கமாக அலகு கட்டண வீதம் என்பது வாகனத்தின் என்ஜின் கொள்ளளவின் பிரகாரம் அறவிடப்படுவது, இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் பெறுமதியில் விசேட இறக்குமதி வரி, வாகன வகுப்பின் பிரகாரம் விசேட சொகுசு வரி மற்றும் மேற்படி சகல வரிகளும் அடங்கலான தொகை மற்றும் வாகனத்தின் CIF பெறுமதியின் மீது பெறுமதி சேர் வரி (VAT) போன்றன அடங்கியிருக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக, வாகனம் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் வருமான வரி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் இலாப பங்கு போன்றன இலங்கையில் வாகனமொன்றை கொள்வனவு செய்யும் நபருக்கு செலுத்த வேண்டியிருக்கும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தென்னிலங்கை பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் திகதி தொடர்பில் தெளிவான அறிவித்தல் வழங்கப்படவில்லை.
வர்த்தமானி அறிவித்தல்
கடந்த காலங்களில் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சாதகமான பதில்களை வெளியிட்டிருந்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை.
அத்துடன், இறக்குமதி செய்யப்படக்கூடிய வாகனங்களின் வயது தொடர்பில் தவறான சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.
சனிக்கிழமை வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தனிநபர் பாவனைக்கான கார்கள் இறக்குமதியின் போது, 3 வருடங்கள் வரை பழமையான வாகனங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தரப்பினர், பத்து வருடங்கள் வரை பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என தவறான அர்த்தத்தை சேர்க்கின்றனர்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கொங்கிறீற் மிக்சர்கள் போன்ற விசேட வகையைச் சேர்ந்த வாகனங்கள் மாத்திரமே பத்து வருடங்களுக்கு உட்பட்டதாக இருந்தால் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.