இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தனது கணவர் எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனுவின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையிலும் நீதிப்பொறிமுறையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இராணுவத்தினர் தடையாக இருப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட சசிதரன் (எழிலன்) குறித்து 2012 இல் ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்த நிலையில் 2023இல் வவுனியா உயர்நீதிமன்றம் தீரப்பை அறிவித்தது.
அந்தத் தீர்ப்பில் எழிலன் இராணுவத்திடம் சரணடைந்ததை மன்று உறுதிப்படுத்திய நிலையில் அவரை மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வெளிவந்தது.
ஆனால் இறுதிப்போரின் போது முல்லைத்தீவில் இருந்த 58ஆவது படையணி அந்த தீர்ப்பிற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்தும் தடை உத்தரவை பெற்று வருகின்றது.
இது தான் இலங்கையின் நீதித்துறையில் இருக்கின்ற பிரச்சினை.
உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கே தடை உத்தரவைப் பெற்றிருக்கின்ற அளவிற்கு தான் இங்கு நீதி நிலைநாட்டப்படுகின்றது.
உள்நாட்டுப் பொறிமுறையில் தோற்ற பின்னர் தான் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வழக்கு கொப்பியைப் பதிவு செய்துள்ளேன். எதிர்காலத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் குறித்து தற்போது சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்து ஏற்கனவே பேசப்பட்ட விடயம் தான்.
வெள்ளைக்கொடி விவகாரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோர் ஏற்கனவே இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் தற்போது சரத்பொன்சேகா தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்லும் நிலையில் குறித்த ஆதாரங்களை எந்தளவிற்கு சர்வதேசத்திற்கு வழங்குவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
உண்மையில் இந்த சம்பவம் வெறுமனே மகிந்தவையும் கோட்டாபயவையும் குற்றஞ்சாட்டுவது மட்டுமன்றி இது ஒரு அரசு செய்த குற்றமாகும். எனவே முழு அரசும் தண்டிக்கப்பட வேண்டும்.
எழிலனுடைய வழக்கில் 58ஆவது படையணியையே பிரதிவாதிகளாக குறிப்பிட்ட நிலையில் ஆனால் அந்தப் படையணியின் சவேந்திர சில்வா நீதிமன்றுக்கு வரவில்லை. அந்தக் களத்திலே நிற்காத ஒருவர் தான் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
யுத்தத்தில் தான் வெற்றிபெற்றதாக கூறும் சரத்பொன்சேகா இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒருவராக இருக்கின்றார். இனிவரும் காலங்களிலாவது அவர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/uczwcbgI7pY

