டெண்டர் கோரலில் ஏற்பட்ட மோசடியே பதுளை-மஹியங்கனை பேருந்து விபத்துக்கு காரணமாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மணரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் பேரில் இரண்டாவது விசாரணை கடந்த வாரம் நடைபெற்றபோதே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு சேவைகள் பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் பலியாகினர்.
கொள்முதல் நிபந்தனைகள் மீறல்
இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையில் பின்வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த எல்ல அருகே, கொத்தலாவல பாதுகாப்பு சேவைகள் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, 2024 நவம்பர் 01, அன்று நடந்த விபத்து தொடர்பான நிபுணர் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை.

பல்கலைக்கழக செயல்பாடுகளுக்காக 2017 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பேருந்தை வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் 1992 இல் தயாரிக்கப்பட்ட பேருந்து எவ்வாறு பெறப்பட்டது?
கொள்முதல் நிபந்தனைகளை மீறியே, விபத்தில் சிக்கிய பேருந்தை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழு அங்கீகரித்துள்ளது. இதற்காக வேறு எந்த டெண்டரும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
டெண்டர் குறித்த உண்மைகள்
இருப்பினும், இது குறித்து விசாரணை செய்த போது, டெண்டர் எவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டது என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் விபத்துக்கான பிற காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக இராசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் கோரிய அறிக்கைகள் இது வரை வழங்கப்படவில்லை என பதுளை காவல்துறையினரிடம் விசாரத்த போது தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கான காப்புறுதி இழப்பீட்டைப் கூட இன்னும் பெற முடியவில்லை. தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அளவையியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் குழு ஒன்று இந்த விபத்தில் சிக்கியது.
அதன்போது, நான்கு பேர் பலியாகினர், ஐந்து பேர் நிரந்தரமாக ஊனமுற்றுள்ளனர். விபத்தில் சிக்கிய மற்றொரு குழு மாணவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக விபத்தில் இறந்த மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

