சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணையத் தளங்களில் பகிரப்பட்டு வரும் போலி வேலை
விளம்பரங்களின் அதிகரிப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி ஒரு எச்சரிக்கையை
வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி விளம்பரங்கள் பெரும்பாலும், மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ
சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி, மத்திய வங்கியில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக
பொய் கூறி பொதுமக்களை ஏமாற்றுகின்றன.
மோசடி வேலைவாய்ப்பு
இந்தநிலையில் தமது வங்கியின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில், மூன்றாம் தரப்பு
தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்று மத்திய வங்கி
தெளிவுபடுத்தியுள்ளது.
அதற்கு பதிலாக, அனைத்து அதிகாரப்பூர்வ தொழில் வாய்ப்புகளும், தமது
வலைத்தளத்தில் “தொழில்கள்” பிரிவின் கீழ் மற்றும் வங்கியின் சரிபார்க்கப்பட்ட
சமூக ஊடக தளங்கள் மூலம் பிரத்தியேகமாக வெளியிடப்படுகின்றன என்றும் மத்திய
வங்கி தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இதுபோன்ற தவறான விளம்பரங்களில்
நாட்டம் கொள்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுபோன்ற மோசடி வேலைவாய்ப்பு இடுகைகளைக் காணும் எவரும் உடனடியாக மத்திய வங்கி
அல்லது தொடர்புடைய சட்ட அமுலாக்க நிறுவனங்களிடம் முறையிடுமாறு மத்திய வங்கி
கேட்டுக்கொண்டுள்ளது.