வன்னியில் ஏறக்குறைய 370,000 கால்நடைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுக்கான
மேச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே மேச்சல்தரவைக்காக காணிகளை ஒதுக்கிக்கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
மேச்சல்தரவை இல்லாத சிக்கலான நிலமை
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 100,000 கால்நடைகளும், மன்னார்
மாவட்டத்தில் 140,000 கால்நடைகளும், வவுனியா மாவட்டத்தில்
130,000 கால்நடைகளுமாக, வன்னிப் பகுதியில் மொத்தமாக ஏறக்குறைய
370,000 கால்நடைகள் காணப்படுகின்றன.
இவ்வாறு பெருமளவான கால்நடைகள் காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்குரிய
மேச்சல்தரவை இல்லாத சிக்கலான நிலமை காணப்படுகின்றது.
இதனால் கால் நடைகளை வீதிகளின் இருமருங்கிலும் மேயவிட வேண்டிய நிலை காணப்படுவதாக
கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேச்சல் தரவையின்மையால் கால்நடை
வளர்ப்பாளர்கள் பெருத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே இந்த சிக்கல் நிலமைகளைக் கருத்தில்கொண்டு கால்நடைகளுக்குரிய மேச்சல்தரவை
நிலங்களை ஒதுக்கிக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.