Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவில் (Mullaitivu) மின்சார சபையினரின் (CEB) பொறுப்பற்ற செயலினால் விவசாய மக்கள் பாரியளவிலான அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
முல்லைத்தீவில் உள்ள பண்டாரிக்குளத்தில் 240V மின் வழங்கல் மின்வடம் தீயினால் சேதமடைந்துள்ளது.இதனால் அப்பகுதிக்குரிய மின்னிணைப்பினை பிரதான மின் வழங்கல் தொகுதியில் இருந்து மின்சாரசபை ஊழியர்கள் துண்டித்து உள்ளனர்.
மூன்று தினங்களுக்கு மேலாகியும் சேதம் சீர் செய்யப்படாது இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் உரிய அரச அலுவலகங்களிற்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி சமூக ஆர்வலர் தன் ஆதங்கத்தினை பகிர்ந்து கொண்டார்.
நடந்தது என்ன?
முல்லைத்தீவு பண்டாரிக்குளம் கிராமத்தில் வீதியோரமாக பரவிய தீயினால் அப்பகுதி ஊடாக கொண்டு செல்லப்படும் கறுத்த உறையிடப்பட்ட மின் வடங்கள் சேதமாகின.
இந்த மின்வடங்களே வீடுகளுக்கான முதன்மை மின்வழங்கலை செய்வதற்கான மின்னைக் கொண்டு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பகுதி மக்களும் தகவலறிந்து வருகை தந்திருந்த மின்சார சபையினரும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீயினால் எரிந்து சேதமடைந்த மின் வடங்களை பிரதான மின் வழங்கல் தொகுதியில் இருந்து துண்டித்து அகற்றியிருந்தனர்.
இச்சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்கு மேலாகியும் சேதம் சீர் செய்யப்படாது உள்ளது.
மின்சாரத்தை முதன்மை தேவையாக கொண்டுள்ள அப்பகுதி மக்களுக்கு மின்சார இணைப்பை வழங்குவதற்கு கரிசனை காட்டாதது மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்ததனை அவர்களுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள்
விரைவான மின் இணைப்பினை செய்து கொடுக்காததால் விவசாய முயற்சிகளை முன்னெடுக்க முடியாத இக்கட்டான சூழலுக்கு பண்டாரிக்குள மக்கள் தள்ளப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
சேதமான மின் வழங்கல் தொகுதியை விரைவாக சீர் செய்து மக்களுக்கான மின் இணைப்பினை வழமைக்கு கொண்டு வருமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, சேதமான பகுதிகளை சீர்செய்வதற்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மீளவும் அதனை சீர் செய்து தருவோம் என்று பொருள் பட மின்சார சபையினரால் பதிலளிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர் சுட்டிக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
தேவாலயம் ஒன்றும் ஆரம்பப் பாடசாலை ஒன்றும் உள்ளடங்கலாக மக்கள் குடியிருப்பைக் கொண்டுள்ள இந்தக் கிராமத்தில் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பயிர்ச்செய்கைக்கான நீர்ப்பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார் நீர் இறைப்பு முறைக்கு பழக்கப்பட்ட இப்பகுதி மக்களின் விவசாயத்துக்கு தேவையான நீர் மற்றும் அவர்களது அன்றாட தேவைக்களுக்கான நீர் என நீரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் தோன்றியுள்ளது.
தரம் 5 வரையுள்ள பாடசாலைக்கு தேவையான நீரைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலரும் இந்த மின் துண்டிப்பினை விரைவாக சீர்செய்து கொடுக்காததால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்சார சபை
பண்டாரிக்குளத்திற்கு அருகிலுள்ள கரடிப்புலவு கிராமத்தில் மின்சார சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடொன்றை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் அரசாங்க நிறுவனமான இலங்கை மின்சார சபை மக்கள் நலன் சார்ந்தும் இயங்க வேண்டிய கடப்பாட்டினை கொண்டுள்ளது.
ஆயினும் அதன் ஊழியர்கள் அவ்வாறு இயங்குவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு குழுவாக செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் மின்கட்டணம் செலுத்த தாமதமானவர்களின் வீடுகளில் மின்துண்டிப்பை வலிந்து மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்கள்.
அவ்வாறு செயற்படக்கூடியவர்களுக்கு சேதமான பண்டாரிக்குள மின் இணைப்பு பகுதியை சீர் செய்து மின் வழங்கலை வழமைக்கு கொண்டு வருமாறு கேட்கப்பட்ட போது தங்களிடம் ஆளணி இல்லை என்று கூறுவதோடு பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டு தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
வருமான இலக்கை கொண்ட அரச நிறுவனமாக மின்சார சபை இருக்கும் போது அது தன்னுடைய நுகர்வோரிடம் அவர்கள் நலன் சார்ந்து இயங்கத் தெரியாத ஒரு நிறுவனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அத்தியவசிய தேவையாக மின்சாரம் இருப்பதும் தனி நபர்களினால் மின்னுற்பத்தியை விற்பனை செய்வதற்கு இருக்கும் சட்டத் தடையுமே இலங்கை மின்சார சபையினர் பொது மக்களோடு மனித நேயமற்ற முறையில் செயற்பட காரணமாகும் என சமூகவியல் ஆய்வாளர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.