மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார
நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட இடங்களில் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாகவும்,
கடந்த காலங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளமைக்கு குறித்த வருமானம் ஒரு
எடுத்துக்காட்டு என மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்
தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (20) காலை மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டுக்கான வியாபார நடவடிக்கை
மன்னார் நகர சபையினால் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைக்கால வியாபார நிலையங்களை
அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏல விற்பனை மூலம் இடம்
வழங்கப்பட்டது.

மன்னார் நகர சபை பிரிவில் 339 தற்காலிக வியாபார நிலையங்களை
அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது.
அதில் 284 கடைகள் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை வரை ஏல விற்பனை
செய்யப்பட்டுள்ளது.அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 4 கோடியே 85 ஆயிரத்து 866
ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் 55 கடைகள் ஏல விற்பனைக்கு செல்ல உள்ளது.அதனூடாக வருமானம் கிடைக்கும் என
எதிர்பார்க்கின்றோம்.குறித்த வருமானங்களை வைத்துக் கொண்டு மன்னார் நகர சபை
பிரிவில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த குறித்த நிதி 2026 ஆம் ஆண்டு
பாதீட்டில் பயன்படுத்தப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்ட போது நகர சபைக்கு வருமான இழப்பு
ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.ஆனால் கடந்த காலங்களை விட வெளிப்படை
தன்மையுடன் ஏல விற்பனை இடம்பெற்றமையால் இம்முறை 4 கோடிக்கும் மேற்பட்ட
வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் முந்தைய நிர்வாகங்களினால் எவ்வாறு ஊழல் இடம் பெற்றுள்ளது
என்பதற்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கிறது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான வருமானமே
மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.
13 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடை
பண்டிகை கால வியாபாரங்களை பாரிய அளவில்
மன்னாரில் மேற்கொண்டு வரும் பல வியாபாரிகளிடம் நான் வாக்குமூலங்களை பெற்றுக்
கொண்டுள்ளேன். அவர்களின் வாக்கு மூலங்களை அடுத்த சபை அமர்வில் முன் வைக்க
இருக்கிறேன்.

13 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடையை அவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்து
எடுத்துள்ளார். அதுவும் தனிப்பட்ட முறையில் அவர் டிசம்பர் மாதம் 15ம் திகதி
தொடக்கம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வர்த்தக நிலையத்தை நடத்தியுள்ளார்.
என்னிடமும் குறித்த வர்த்தகர் அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சியை
மேற்கொண்டார்.எனினும் சட்ட முறைப்படி வர்த்தக நிலையத்தை பெற்றுக்கொள்ளவும்
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்
என்ற அறிவுறுத்தலலையும் வழங்கியுள்ளேன்.
குறித்த வர்த்தகர் பகிரங்க ஏலம் மூலம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு
வர்த்தக நிலையத்தை பெற்றுள்ளார்.எனவே எதிர்வரும் காலங்களிலும் மன்னார் நகர சபை
வெளிப்படை தன்மையுடன் செயல்படும்.
சட்டவிரோத வியாபார நடவடிக்கை
மன்னார் நகர சபை பிரிவில் எதிர் வரும்
காலங்களில் சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் எவையும் இடம்பெறாது.
முறைக்கேடாக செயல்பட்ட கடந்த நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களுக்கு பெற்றுக் கொள்ளப்படும் நிதி மக்களுக்கு
செலவிடப்பட வேண்டும் என்பது எமது நோக்கம்.
எனவே மக்களின் நிதியை கையாடல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு
அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.எனக்கெதிராக போலி முக நூல்களில் சிலர்
வசை பாடி வருகிறார்கள்.மக்களுக்கு சேவை செய்ய வந்த நான் இந்த அவதூறுகளுக்கு
ஒரு போதும் அஞ்ச போவதில்லை.
மக்களுக்கான சேவைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஊழல் வாதிகளையும்
அம்பலப்படுத்தி உள்ளேன்.விரும்பினால் அவர்கள் பொலிஸ் நிலையம் அல்லது
நீதிமன்றம் ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.நான் பொய்யான குற்றச்சாட்டுகளை
சுமத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் நகரசபையின் உப தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர்
மைக்கல் கொலின் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

