கடந்த அரசாங்கம் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி கிடப்பில் போட்ட சட்டத்தை தற்போதைய
அநுர தலைமையிலான அரசாங்கம் மீளவும் நடைமுறைப்படுத்த இரகசியமான முறையில்
முயற்சிப்பதற்கு அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த சங்கத்தின் வருடாந்த இறுதிக் கூட்டம் நேற்று (31) யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடற்றொழில் அமைச்சரும் பிரச்சினையை தீர்ப்பேன் தீர்ப்பேன் என்று
கூறிவருகின்றார். ஆனால் தினமும் எங்களுடைய கடல்வளமும் வாழ்வாதாரமும் இலங்கை
இந்திய அரசுகளால் அழிக்கப்படுகின்றன.
கடற்றொழிலாளர் பிரச்சினை
குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இழுவைமடி தொழில்களை
பயன்படுத்தியே எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த புதிய அரசாங்கம் எமக்கு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் நிறைவுறுகின்றது. ஆனாலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை் இராஜதந்திர ரீதியில்
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் அல்ல
தமிழ்நாட்டு அரசாங்கமே தீர்வை காண முன்வரவேண்டும் அவர்களுடனேயே பேச்சுக்கள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், இதுவரையான காலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் மத்திய அரசின் பக்கம்
பிரச்சினையை தட்டிவிட்டு தொடர்ந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றது. இதை ஏற்கமுடியாது” என தெரிவித்துள்ளார்.