இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது காற்றின் மாசடைவு மட்டம் 150 முதல் 200 வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இது ஆரோக்கியமற்ற நிலையை குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரமடைந்துள்ள வளிமாசு நகர்வு
எல்லை தாண்டிய வளிமாசு நகர்வு மற்றும் தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் தாக்கமே இதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த ஆண்டுகளிலும் இதே காலப்பகுதியில் இவ்வாறான நிலைமை அவதானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் நிலவும் காற்றின் தரத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் (சுவாசக் கோளாறு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்) இதனால் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம் என கலாநிதி குணவர்தன எச்சரித்துள்ளார்.
உடனடி மருத்துவ ஆலோசனை
பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றுடன் இந்த நிலைமை படிப்படியாக சீரடையும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

