டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையை தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின்
ஹசலக்க நகரை ஒட்டியுள்ள பமுனுபுர பிரதேசத்தின் ஐந்து கிராமங்களை அரசு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக இந்த பகுதிகளில் நிலம் சுமார் 40 அடி ஆழம் வரை
உள்வாங்கியுள்ளதால், மனித குடியேற்றங்களுக்கு இவை பாதுகாப்பற்றவை என கருதப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த
முகாமைத்துவக் குழுவின் உதவிப் பணிப்பாளர் எல்.ஏ.கே.ரணவீர தெரிவித்துள்ளார்.
ஆள் நடமாட்டமற்ற வலயங்கள்
உதத்தாவ, நெலும் மல, கல நக, மெத கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய
கிராமங்களே இவ்வாறு தடைசெய்யப்பட்ட வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் உதத்தாவ கிராமத்தில் மாத்திரம் 12 இற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு
மண்ணாகப் புதையுண்டுள்ளதுடன், இதுவரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், பெருமளவிலான உடல்கள் 30 முதல் 40 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என
நம்பப்படுவதால், காணாமல்போனவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக உறுதிப்படுத்த
முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மீட்புப் பணிகள் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மண்சரிவு அபாயங்களை மதிப்பிடும் பணிகள்
இதற்கிடையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி
ஆசிரி கருணாவர்தன கருத்துத் தெரிவிக்கையில், அதிக அபாயம் உள்ளதாகக்
கண்டறியப்பட்ட இந்தப் பகுதிகளில் மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்றும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில்
மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது 3 டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால மண்சரிவு அபாயங்களை
மதிப்பிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரங்கிகா ஹல்வதுர தலைமையிலான
குழுவினர் யஹங்கல மலைப்பகுதியில் நடத்திய ஆய்வில், சட்டவிரோத புதையல்
வேட்டைக்காக அங்கு இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதும், பாறைகள்
துளையிடப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பலத்த அதிர்வலைகள் மலையின் கட்டமைப்பைப்
பலவீனப்படுத்தியதே இந்த பாரிய மண்சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனச்
சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான அறிக்கை மினிப்பே பிரதேச செயலாளரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

