வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வவுனியா (Vavuniya) நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
வாகன சாரதிகள்
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (27) காலை முதல் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.