2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான வரவுகள் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை (BOI) தெரிவித்துள்ளது.
இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக் கடன்களும் அடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 138 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு மூலதனங்கள்
இந்த முதலீட்டு வரவு நான்கு மூலதனங்களினுடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பங்கு மூலதனம் ஊடாக 133 மில்லியன் அமெரிக்க டொலரும், மீண்டும் முதலீடு செய்யப்பட்ட வருவாய் ஊடாக 132 மில்லியன் அமெரிக்க டொலரும், முதலீட்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டு கடன்களினூடாக 231 மில்லியன் அமெரிக்க டொலரும், முதலீடுகளுக்கான நீண்ட கால வெளிநாட்டு வணிகக் கடன்களினூடாக 331 மில்லியன் அமெரிக்க டொலரும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த முன்னேற்றம் புதிய முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும், வலுவான வணிகச் சூழலில் தங்கள் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.