கடுமையான மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சேதமடைந்த மற்றும் விரிசல் அடைந்த பகுதிகளைக் கண்காணிக்க வெளிநாட்டு புவியியல் நிபுணர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் வருகைத் தந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து இந்த புவியியலாளர்கள் குழுக்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா பேரழிவு
அதன்படி, டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகளாக சேதமடைந்த மற்றும் விரிசல் அடைந்த பகுதிகளை அடையாளம் காண ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதற்கட்ட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு உள்ளிட்ட உள்ளூர் நிபுணர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சேதமடைந்த மற்றும் விரிசல் அடைந்த மலைச் சரிவுகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க பொறியியல் முறைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வுகள் ஆராயும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டு, பெறப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படும்.
வெளிநாட்டு நிபுணர்களின் விசாரணைகளுக்கு மேலதிகமாக, உள்ளூர் புவியியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய பல குழுக்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெளிநாட்டு நிபுணர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

