எரிபொருள் விநியோகஸ்தர்கள் குழு இன்று (3) ஜனாதிபதி செயலகத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் வழங்கப்படும் 3% கழிவை இரத்து செய்ய இலங்கை
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையைத்
தீர்க்கும் முயற்சியாக இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறு,
பெட்ரோலிய வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
மனு கையளிப்பு
இது ஒரு நியாயமற்ற கட்டணம் என்று அதிகாரிகள் கருதினால், இந்த விவகாரத்தைப்
பற்றி விவாதித்து நியாயமான தீர்வைக் காண, தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள
பிரதிநிதிகள், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத்
தீர்க்க பெட்ரோலிய வணிகர் சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான
ஏற்பாடுகளைச் செய்யவும் கோரியுள்ளனர்.
மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கோர்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும்
இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன்
இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.