இம்முறை எரிபொருள் விலை திருத்தமானது, விலைச் சூத்திரத்திற்கு அமைய திருத்தப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) சுட்டிக்காட்டியுள்ளார்.
பெட்ரொலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய விலை குறைப்பு
எரிபொருளின் விலையை திடீரெ நூறு அல்லது இருநூறு ரூபாவால் குறைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்க விரும்புகின்ற போதிலும், இலாப நட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒரேயடியாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், அது நிதி நிலைமையை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சலுகை
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் நிலையில், எரிபொருள் விலையில் மேலும் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு, நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.