தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பிரச்சினை நாளைய தினத்துக்குள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தங்களது பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இந்நிலையில் தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தேவையான அளவுக்கு அதிக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 3 சதவீத கழிவு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கனியவள விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை மறுதினம் காலை 9 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.