கடந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த மானியங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே (Rathna Gamage) தெரிவித்துள்ளார்.
காலி (Galle) – ஹபராதுவ பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
உபகரணங்களின் விலை
சிறு தொழிலாக மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கும் நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் குறித்த எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறித்த விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.