இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்ப்ட்ட சமஸ்டித் தீர்வை எட்ட, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுவாக கடந்த 75 ஆண்டுகால கொள்கைகளும், குறிப்பாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
அண்மையில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை
இயற்கையாகவே, எதிர்காலம் கணிசமாக சிறப்பாக இருக்க வேண்டுமானால், எதிர்காலத்திற்கான கொள்கைகள் கணிசமாக வேறுபட்டிருக்க வேண்டும்.
13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது கொண்டுவரப்பட்ட காலத்தை விட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய அரசாங்கத்திற்கு அண்மையில் வழங்கப்பட்ட மக்கள் ஆணையானது முழுமையான முறைமை மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை, வழமை போன்று வியாபாரம் இனி சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது.
இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணங்கள்
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஒற்றையாட்சி அமைப்பு.
இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாநிலத்தின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, அர்த்தமுள்ள சுயாட்சி மற்றும் சுயராஜ்யத்தை அடைய முடியாது என்ற அடிப்படையில் தமிழர்கள் அதை நிராகரித்தனர்.
இதேவேளை நாட்டின் உயர் நீதிமன்றங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன.
அவை அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை கொழும்பில் உள்ள அரசாங்கம் அனைத்து அதிகாரங்களின் ஒரே களஞ்சியமாக இருக்கும். குறிப்பாக அவை அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.