காலி(galle) சிறைச்சாலையின் காவலாளி ஒருவர் 30 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 40 கிராம் 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அக்மீமன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஹந்துவ தெற்கு நீதிமன்றப் பகுதியில் அக்மீமன காவல்துறையின் சிறப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல்
காலி அக்மீமன காவல் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமை காவல்துறை பரிசோதகர் தம்மிக நாகஹவத்தவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவரா…!
கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை, துடாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவர் காலி சிறைச்சாலையில் சிறைச்சாலைக் காவலராகப் பணிபுரிகிறார், மேலும் இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், இதனை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் இவருடன் வேறு யாராவது கூட்டு வைத்துள்ளனரா என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. சந்தேக நபர் இன்று (12) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தார்.

