மத்தேகொட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் ஹயதெனோ அகுலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் இன்று (15) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சிறுமிகளில் 15 வயதுடைய 3 பேர், 16 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய ஒருவர் என அறுவர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பதின்ம வயது சிறுமிகள்
நீதிமன்ற உத்தரவின் பேரில் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக பாதுகாப்புக்கு தகுதியுடைய பதின்ம வயது சிறுமிகள் தங்கவைக்கப்பட்ட இந்த பராமரிப்பு நிலையத்தில் தற்போது 22 சிறுமிகள் உள்ளதாகவும், அவர்களில் 6 சிறுமிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) 22 சிறுமிகளுக்கும் உணவு விநியோகம் செய்த நிலையில் இரவு 8.45 மணி வரை ஆறு பேரின் உணவும் கிடந்துள்ளது. இது தொடர்பாக விடுதி மேற்பார்வையாளர் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில் ஆறு பேர் தப்பிச் சென்றமை தெரியவந்தது.
காவல்துறையில் முறைப்பாடு
இதனையடுத்து அவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சிறுமிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடு சிறுமி ஒருவரின் உறவினர் வீடு என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.