நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள மருத்துவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முறைப்பாடு
அந்த அறிக்கையின்படி, வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) சிகிச்சைக்காகச் சென்ற ஒரு இளம் பெண், ஒரு மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி முறைப்பாடு அளித்துள்ளார்.

இதன்படி, சம்பவத்தின் தீவிரத்தை சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதுடன், முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ள மருத்துவர் 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் என தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான மருத்துவர் முன்பு அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் அரசியலமைப்பை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைக்கு ஆதரவு
இந்த நிலையில், மருத்துவர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவராக இருந்தாலும், சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றவாளிகளைப் பாதுகாக்க எந்த வகையிலும் தயாராக இல்லை எனவும் விசாரணைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

