யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலை (Base Hospital Thellippalai) நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிராக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை (13) இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (11) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தெல்லிப்பளை மண்ணின் புகழ் பூத்த எங்கள் வைத்தியசாலை போர் மற்றும்
இடப்பெயர்வுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து புதிய இடத்தில் இயங்கத்
தொடங்கியது.
யாழ் போதனா வைத்தியசாலை
குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி அடைந்து யாழ் போதனா
வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) அடுத்ததாக வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற
வைத்தியசாலையாகத் தன்னைத் தரமுயர்த்தி மிடுக்கோடு விளங்குகின்றது.
விசேட
பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத்
தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றி வரும் மகத்தான
வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின்
பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச்
சந்தித்து வருகின்றது.
அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற
நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது. இது தொடர்பாக மாகாண
மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
சமூக ஊடகப் பிரச்சாரம்
வைத்தியசாலையின் இந்த விரும்பத்தகாத நிலைமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக அண்மையில் நாங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்புப்
போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தோம்.
மேலும் இவ் வைத்தியசாலையில் புற்றுநோய்ப் பிரிவும் அங்கு சேவையாற்றும் சேவை
நோக்கம் கொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்தியும்
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ச்சியான நிர்வாக ரீதியான
முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய வைத்தியசாலை நிர்வாகி
மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவரின் தலைமையிலானதாக சந்தேகிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக ஊடகப்
பிரச்சாரம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
எனினும், எமது வைத்தியசாலையை
மீட்டெடுக்கப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைப் பாதுகாக்க பொது மக்களின்
ஒத்துழைப்பும் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கவனயீர்ப்புப் போராட்டம்
உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கில் தொழிற் சங்க நடவடிக்கையாக தற்போது பொது
மக்களிடமும், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமும், தெல்லிப்பளை
வைத்தியசாலையில் நிலவும் சிக்கல்களை விளக்கும் விழிப்புணர்வுப் பரப்புரைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கால விரயம் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால் வைத்திய
நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக்
குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன்,
புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக
இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதுடன், வைத்திய நிபுணர்கள் மற்றும்
வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில்
சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை வெகு விரைவில்
ஏற்படுத்தாவிடத்து எதிர்வரும் 13 .06.2025 அன்று வைத்தியர்களினால்
“எங்கள் வைத்திய சாலையை மீட்டெடுப்போம் – புற்றுநோய்ப் பிரிவைக்
காப்பாற்றுவோம் ”
என்ற தொனிப் பொருளில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தத்
தீர்மானம் எடுத்துள்ளோம்.
மக்கள் நலன்பால் அக்கறை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள்,
பொது அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலை மற்றும் நோயாளர் நலன்
விரும்பிகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்
கொள்கின்றோம்.
வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து உங்கள் வைத்தியசாலையைக் காத்திடக்
கரம் கோர்த்திடுவோம் வாரீர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this



https://www.youtube.com/embed/1OMwmTn10MU

