Courtesy: uky(ஊகி)
வன்னியில் விடுதலைப் புலிகளினால் நட்டு வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள் வெட்டுமரங்களுக்காக தரப்படுத்தப்பட்டு உள்ளன.
நீண்ட கால பயன்பாட்டை இலக்காக கொண்டு பயிரிடப்பட்ட தேக்கு மரங்கள் தேக்கம் காடுகளாக இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவை இப்போது இலங்கை வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேக்கம் காடுகளில் வெட்டு மரங்களுகென தெரிவு செய்யப்பட்டுள்ள தேக்கம் மரங்கள் தவிர்ந்த ஏனைய தேக்கம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
ஏனைய பயன்பாடுகள்
வெட்டு மரப் பயன்பாட்டுக்கென தேர்வாகிய தேக்கம் மரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக இடமெடுத்தல் அவசியமாகின்றது.
இதனை கருத்தில் கொண்டு தேக்கம் மரங்களின் வளர்ச்சியை கணக்கெடுத்து பொருத்தமற்ற மரங்கள் ஏனைய பயன்பாடுகளுக்காக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
வன்னியின் முல்லைத்தீவில் அவ்வாறு வெட்டப்பட்ட தேக்கம் மரங்களை ஒட்டுசுட்டான் மரக்கூட்டுத்தாபனத்தில் மக்களால் கொள்வனவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வேலிக்கட்டைகளுக்காகவும் சிறியளவிலான வெட்டு மரப் பயன்பாட்டுக்கும் தேக்கம் கட்டைகள் கொள்வனவு செயற்ப்படுவதாக ஒட்டுசுட்டான் மரக்காலை தொடர்பில் தன் அவதானங்களை ஒட்டுசுட்டான் வாழ் விவசாயி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
நீண்ட கால பயன்பாட்டுத் திட்டம்
விடுதலைப்புலிகளின் வனவளபாதுகாப்பு பிரிவினரால் வன்னியின் பல இடங்களிலும் மீள்வனமாக்கல் முறையில் பயனுடைய மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வந்திருந்தமை நோக்கத்தக்கது.
காடுகளினூடாக செல்லும் பாதைகளின் ஓரங்களில் குறிப்பிட்டளவு தூரம் இரு பக்கங்களிலும் காடுகள் வெட்டப்பட்டு சீராக்கப்பட்டன.
அதன் பின்னர் பயன் தரக்கூடிய தேக்கு, பச்சைக்காயா, சஞ்சீவி, வேம்பு என வெட்டு மரத் தேவை மற்றும் விறகுத் தேவைகளை ஈடு செய்து கொள்ளக்கூடியவாறு மரங்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிரிடப்பட்டதாக தங்களின் நினைவுகளை முள்ளியவளை வாழ் முதியவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
முள்ளியவளையில் உள்ள தேக்கம் காடுகள் பற்றிய உரையாடலுக்காக முள்ளியவளை வாழ் வயோதிபர் சிலருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பெருமிதமாக உள்ள காட்சி
செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் முள்ளியவளை தேக்கம் காட்டின் ஒரு பகுதியில் எடுக்கப்பட்டவையாகும்.
இந்த தேக்கம் காடு விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டிருந்தன. வெட்டுமர வளர்ச்சிக்காக இடமெடுத்தல் நடைபெற்ற போது அதிகமான தேக்கம் மரங்கள் வெட்டப்பட்டு இருந்தன.
இப்போது வெட்டு மரத் தேவைக்காக தேர்வு செய்யப்பட்ட தேக்கம் மரங்கள் தேக்கம் காடாக இருக்கின்றது. இந்தக் காட்சி தமக்கு பெருமிதமாக இருப்பதாக முள்ளியவளை வாழ் வயோதிபர்கள் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தனர்.
பொதுமக்களின் நாளைய நலன்களையும் பொறுப்புணர்வோடு சிந்தித்துச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருந்த விடுதலைப்புலிகளை எவ்வாறு உலக நாடுகள் பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டன என தெரியவில்லை என்று விடுதலைப்புலிகளின் மக்கள் நலச் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Dev அவரால் எழுதப்பட்டு,
14 September, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>